அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை - 641046, கோயம்புத்தூர் .
Arulmigu Subramaniaswamy Temple, Maruthamalai - 641046, Coimbatore District [TM009762]
×
Temple History
தல பெருமை
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது.
பழமையும் பெருமையும் வாய்ந்த கொங்குநாடு. அப்பெருமைமிக்க கொங்குவள நாட்டிலே மங்கா புகழாக விளங்குகின்ற அணிகொங்கு மேற்றலையாம் மருதமலை என்னும் திருத்தலம் தொன்மையான திருத்தலம் ஆகும். கச்சியப்ப முனிவர் தாம் அருளிய பேரூர் புராணத்தில் மருதவரைப் படலம் அபயப் படலத்தில் மருதமலையைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.
மருதமலை திருத்தலம் கொங்கு சோழர்களால் முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள்...கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன் அழகுற அமையப் பெற்றுள்ளது.
பழமையும் பெருமையும் வாய்ந்த கொங்குநாடு. அப்பெருமைமிக்க கொங்குவள நாட்டிலே மங்கா புகழாக விளங்குகின்ற அணிகொங்கு மேற்றலையாம் மருதமலை என்னும் திருத்தலம் தொன்மையான திருத்தலம் ஆகும். கச்சியப்ப முனிவர் தாம் அருளிய பேரூர் புராணத்தில் மருதவரைப் படலம் அபயப் படலத்தில் மருதமலையைக் குறித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.
மருதமலை திருத்தலம் கொங்கு சோழர்களால் முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பெற்று இத்திருத்தலம் உருவானது. இதற்கு சான்றாக மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற பெயர்களெல்லாம் 9 ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் பரவியிருந்தது.
மருதமலை தலபுராணம்
இத்திருக்கோவில் தலபுராணம் திருவாடுதுறை ஆதினம் கச்சியப்ப முனிவரால் தொகுத்தளிக்கப்பட்டது.இறைவனிடம் 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் ஆளப்பெருவரம் பெற்ற சூரபத்மன் தன் தம்பியர்களான சிங்கமுகன், தாரகன் என்பவர்களின் துணையொடு தேவர்களுக்குச் சொல்லொணாக் கொடுமைகளைச் செய்தான். தேவர்கள் சூரபத்மனின் கொடுமையை தாங்க இயலாமல் முக்கட்பெருமானாகிய சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் தேவர்களிடம் சூரபத்மன் முதலியோரைவதம்செய்ய குமரன் தோன்றும் வரை ஆதிபுரி எனப்படும் பேரூரில் தங்கியிருக்குமாறு ஆணையிட்டார். மருதமலை அங்கே உள்ளது எனக்கூறிய சிவபெருமான்,
முருகன் என்று மெய்கொள் மொயம்பினான்
உருகும் அனபர்க் குதவி செய்யவே
பெருகு காமர்ப் பிறங்க லாயினான்
அருகின் வேலு மருத மாயதே
என்று அதன் சிறப்பைத் திருவாய் மலர்ந்தருளினார்.
சிவபெருமானின் ஐந்து முகத்திலிருந்து அதோர் முகமாக தீப்பிழம்பாக திருமுகங்கள் ஆறாக முருகப்பெருமான் தோன்றினார். அதனை அறிந்த நாரத மகரிஷி தேவர்கள், முனிவர்களிடத்திலே இந்த நற்செய்தியைச் சொன்னார். தேவர்களும் முனிவர்களும் இணைந்து முருகப் பெருமானை வேண்டி கல்பக்கோடி ஆண்டுகள் தவம் மேற்கொண்டார்கள்.
இதையறிந்த மகாவிஷ்ணுவும் அன்னை உமாதேவியின் திருப்பாதச் சிலம்பு முத்துகளிலிருந்து உதித்த நவவீரர்களும் மருதவரைக்கு (மருதமலை) விரைந்தனர். அவர்களும் இந்த இன்னல்களில் இருந்து விடுபட தவம் புரிந்தனர். நாரத மகரிஷி முருக வழிபாட்டைப் பற்றி மகாவிஷ்ணுவிற்கு எடுத்துரைக்க, மகாவிஷ்ணு அவ்வழிபாட்டினைத் துவங்கினார். ஐந்து காலங்களாகப் பிரித்து (1. கார்காலம், 2. கூதிர்காலம், 3. இளவேனில், 4. முதுவேனில், 5. முன்பனிகாலம்) நாரத மகரிஷி உரைத்த பூஜை உபகரணங்களைக் கொண்டு பூசனையைத் துவங்குகின்றார். சந்தனலேபம், ஏலம், இலவங்கம், கஸ்தூரி, கோரோஜனை இவை அனைத்தும் ஒன்று சேர்த்து குற்றமற்ற பன்னீரில் கலந்து முருகப் பெருமானுக்கு திருமுழுக்காட்டினார். மேலும் காராம்பசுப் பால், தேன், மூன்று வகைப்பட்ட இளநீர், ரத்தினம் இழைத்த பாத்திரத்தில் பஞ்சாமிர்தம், மணம் நிறைந்த சந்தனக் குழம்பு இவைகளை பிரணவப் பொருளாக உள்ள முருகவேலுக்கு அபிடேகம் செய்து இடையிடையே நீங்காமல் நிறைந்த நீரை சங்கினால் எடுத்து அபிடேகம் செய்தார்.
முருகப் பெருமானின் திருவதனத்திலே சந்தனலேபம், ஜவ்வாது, செந்தூரத்திலகமிட்டு திருமேனி தெரியாவண்ணம் அகில் கலந்த சந்தனம் பூசப்பெற்று முல்லை, இருவட்சி, பிச்சி, மல்லிகை, பன்னீர் மலர், மருக்கொழுந்து, வெட்டிவேர், கூவிளம், மாதவி போன்ற மலர்களால் திருமேனி முழுவதும் சாத்தி அலங்கரித்தார். மேலும் முருகவேல் ஒளிப்பிழம்பில் தெரிய, ஒருபடி கொள்ளும்படியுள்ள தகளியுடையதாய் தேவநாயகன் திருக்கண்கள் வரை உயரமுடையதாய் வெள்ளியினாலான விளக்குகள் இரண்டு பக்கங்களில் வைத்து காராம் பசுவின் நெய்யினால் தகளியை நிறைத்து இருவிரல் தடிமன் போல் திரியிட்டு விளக்கேற்றி வழிபாட்டிற்கு ஆயத்தமானார்.
முருகவேலுக்கு திருவமுது படைக்க பாலை ஒத்த வெள்ளிய அரிசி ஒருபடிக்கு மூன்றுபடி பாலும், காற்படி பசுநெய்யும், சர்க்கரை 160 கழஞ்சும், ஏலச்சுக்கு இவற்றின் பொடி வீசும்படியும், ஒரு இளந்தேங்காயின் துருவல் சேர்த்தும் பாகம் பொருந்தச் சமைத்து பின் பச்சை வாழைப்பழம் 15 உரித்துப் போட்டு இனிமையாக எடுத்த பரமன்னத்தை அர்ச்சித்தவுடன் முருகக்கடவுளுக்கு நிவேதனம் செய்தார். இதுவே மருதாச்சல நிவேதனம் அழைக்கப்படுகிறது. ஆக ஏனைய ஐந்து காலங்களிலும் ஆச்சாரத்துடன் பக்தி சிரத்தையுடன் மூவுலகமும் சூரபத்மனுடைய கொடுமையிலிருந்து விலக முருகப் பெருமானை மகாவிஷ்ணு பூசனை செய்தார்.
இந்த வழிபாட்டிற்கு மனம் மகிழ்ந்து முருகப் பெருமான் மருதவேல் படையாக தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நவவீரர்களுக்கும் திருமால் முன்பு காட்சியளித்தார். இனியாமுண்டு அஞ்சேல்என திருவாய் மலர்ந்தருளினார். அப்பெருமைமிக்க மருதவரை எனும் இம்மருதமலையிலே முருகப் பெருமான் வணங்குவோர்க்கும், வருவோர்க்கும், தன்னை வழிபடுவோர்க்கும் வரங்கள் பல வாரி வழங்கும் வள்ளலாக மருதாச்சலமூர்த்தி எனும் திருநாமம் கொண்டு இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கின்றார்.